பாலசந்தர் – பாரதிராஜா இணைந்து ரெட்டசுழி படத்தின் இயக்குனர் தாமிரா காலமானார். கொரோனா தொற்று பாதிப்பு

149

கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட, ‘ரெட்டைச்சுழி’, ‘ஆண் தேவதை’ படங்களின் இயக்குநர் தாமிரா எனும் காதர் மொஹிதின் இன்று காலை மரணமடைந்தார். அவருக்கு வயது 55.

இயக்குநர் கே.பாலசந்திரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி பின்னர் அவரையும், பாரதிராஜாவையும் இணைத்து ‘ரெட்டைச்சுழி’ என்கிற படம் இயக்கியவர் தாமிரா. நடிகரும், இயக்குநருமான சமுத்திரக்கனியோடு சினிமாவில் இணைந்து பணியாற்றியவர் என்பதால் அவரைவைத்து இரண்டாவது படமாக ‘ஆண் தேவதை’ படத்தை இயக்கினார். இந்தப்படம் 2018-ல் வெளியானது.

மூன்றாவது படத்தை ஜெமினி நிறுவனத்துக்காக இயக்க கதை தயாரிப்பில் இருந்தபோதுதான் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கிறார் தாமிரா.

20 நாட்களுக்கு முன்பு சென்னை அசோக் பில்லரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மீண்டெழுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலை மாரடைப்பால் உயிரிழந்திருக்கிறார்.

இயக்குநர் தாமிராவுக்கு 3 மகன்கள், 1 மகள். இயக்குநர் தாமிரா கடைசியாக ஏப்ரல் 11-ம் தேதி தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் ”இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்” என எழுதியிருக்கிறார்.

இயக்குநர் தாமிராவின் மரணம் திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.