இயக்குநர் பா. ரஞ்சித் தமிழ் திரையுலகிற்கு தவறான முன்னுதாரணம். திரைப்பட விழாக்களின் மேடையில் கலந்து கொண்டு பேசும்போது, சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் கருத்துக்களை தொடர்ச்சியாக தெரிவித்து வருகிறார்.” என ‘ஓங்காரம்’ படத்தின் இயக்குநரும், நடிகருமான கேந்திரன் முனியசாமி குற்றம் சாட்டியிருக்கிறார்.
இது தொடர்பாக சென்னையில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:
தமிழ் திரையுலகில் ஏராளமான திறமைசாலிகள் தனித்துவமான அடையாளத்துடன் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறார்கள். ஆனால் முதன் முதலாக பொது வெளியில் தன்னை ஒரு ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதி என வெளிப்படையாக அறிவித்து, ஆதரவைத் தேடிக் கொண்டவர் இயக்குநர் பா. ரஞ்சித். அவருடைய நேர்காணல்களை அண்மையில் பார்வையிட்டேன். அதில் இந்துக்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிராக பல கருத்துகளை தெரிவித்திருக்கிறார். ‘நந்தி மீது ஏறி அமர்ந்தால் பறக்கலாம்’ என அவரிடம் ஆன்மீக பெரியோர்கள் சொன்னதாகவும், அதனை அப்படியே நம்பி, ‘நந்தி மீது ஏறி அமர்ந்ததாகவும், ஆனால் தான் பறக்கவில்லை’ என்றும் தெரிவித்திருக்கிறார்.
இது நந்தியை அவர் கல்லாக பாவித்து அதன் மீது அமர்ந்ததால் அவரால் பறக்க இயலவில்லை. அதே தருணத்தில் நந்தியை கடவுளாக நினைத்து அதன் மீது அமரும் வகையில் தன்னை தகுதிப்படுத்திக் கொண்டு அமர்ந்திருந்தால்.., அவரால் நிச்சயம் பறந்திருக்க இயலும் என்பதுதான் ஆன்மீக பெரியோர்களின் பதிலாக இருக்கிறது. இதனை நான் வழிமொழிகிறேன்.
தற்போது நான் இயக்கி வரும் ‘ஓங்காரம்’ எனும் திரைப்படம், இட ஒதுக்கீடு காரணமாக கல்வி கற்பதற்கான வாய்ப்பு பெற்றிருக்கும் மாணவ மாணவிகள் தான், பாலியல் சுரண்டலுக்கு தூண்டுகோலாக திகழ்கிறார்கள். இட ஒதுக்கீட்டு சலுகைகளை அனுபவித்து வரும் ஒடுக்கப்பட்ட மக்களின் குறிப்பிட்ட பிரிவினர், கல்வி பயிலும் தருணங்களிலும் அதனை தங்களுக்கு ஏற்ற வகையிலான சௌகரியத்திற்காக பயன்படுத்திக் கொள்கிறார்கள். இதனால் மாணவ, மாணவி சமுதாயத்தின் மீது தவறான கருத்தியல்கள் பொதுமைப் படுத்தப்படுகின்றன. இதனை சுவாரசியமான திரைக்கதையாக உருவாக்கி, தயாரான திரைப்படம் தான் ‘ஓங்காரம்’.
பா.ரஞ்சித்திற்கு எதிராக இயக்குநர் மோகன் ஜி போன்றவர்கள் குரல் கொடுத்து வருவது போல்.., ஏராளமானவர்கள் தற்போது அவருக்கு எதிராக குரல் கொடுக்க தொடங்கியிருக்கிறார்கள். அதில் என்னுடைய குரலும் இணைந்திருக்கிறது.
எத்தனை மறைமுக தடைகள், இடையூறுகள் ஏற்படுத்தினாலும், ‘ஓங்காரம்’ திரைப்படம் உறுதியாக திரையரங்குகளில் வெளியாகும். அதற்கான பணிகள் தற்போது தீவிர படுத்தப்பட்டிருக்கின்றன.என்றார்.