இசை அமைப்பாளராகி இருக்கும் கருணாஸ் மகனுக்கு கதை புரியவே ஒரு மாதம் ஆச்சு

99

நிறுவனம் சார்பில் கருணாஸ் மற்றும் கரிகாலன் இணைந்து தயாரித்துள்ள படம் ‘சல்லியர்கள்’. மேதகு படத்தை இயக்கிய இயக்குநர் கிட்டுவின் டைரக்சனில் உருவாகியுள்ள இரண்டாவது படம் இது. சத்யா தேவி என்பவர் டாக்டர் நந்தினியாக முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது தந்தையாக கருணாஸும், வில்லனாக களவாணி புகழ் திருமுருகனும் மற்றும் டாக்டர் செம்பியனாக மகேந்திரனும் நடித்துள்ளனர். இன்னும் பல புதுமுகங்களும் இந்தப்படத்தில் நடித்துள்ளனர்.

வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ள இந்த படத்திற்கு கருணாஸ் மகன் நடிகர் கென் மற்றும் அவரது நண்பர் ஈஸ்வர் இருவரும் இணைந்து இசையமைத்துள்ளனர். இந்தப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா சென்னை சாலிகிராமம் பிரசாத் லேபில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு, இயக்குநர்கள் வெற்றிமாறன், சீனுராமசாமி, ராம்நாத் பழனிக்குமார், தமிழ்தேசிய பேரியக்கத்தை சேர்ந்த பெ.மணியரசன், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்த கொளத்தூர் மணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுப்புலட்சுமி ஜெகதீசன், சட்ட தரணி கே.எஸ்.ராதாகிருஷ்ணன், மே 17 இயக்கத்தை சேர்ந்த திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் இசை அமைப்பாளராக அறிமுகமாகும் கருணாசின் மகன் கென் பேசியதாவது: என்னுடைய நண்பன் ஈஸ்வர் தான் இந்த படத்திற்கு மெயின் இசையமைப்பாளர்.. நான் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளேன்.. இந்த சல்லியர்கள் படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. ஒருவேளை தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம். இதைப்பற்றி புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் இயக்குனர் கிட்டுவுடன் வேலை பார்ப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் அதன்பிறகு கதையை உள்வாங்கி இசையமைக்கத் துவங்கினோம். இந்தப்படத்தில் நடிகர் திருமுருகன் சிங்கள ராணுவ வீரனாக வில்லனாக நடித்துள்ளார். ஆனால் இந்த படத்தின் ஒரு காட்சியை அவருக்கு திரையிட்டு காட்டியதும் கண்ணீர் விட்டு கதறி அழுது விட்டார். என்றார்.