லாக்கப் விமர்சனம்

188

புதுமுக இயக்குநர் சார்லஸ் படம் துவங்கிய வேகத்தில் நம்மை இருக்கையோடு கட்டிப்போடுகிறார். போலீஸ்காரர் சம்பத்(மைம் கோபி) அவரின் பங்களாவில் கொலை செய்யப்படுகிறார். அது குறித்து இன்ஸ்பெக்டர் இளவரசிக்கு (ஈஸ்வரி ராவ்) தகவல் தெரிவிக்கப்படுகிறது. உடனே விசாரணையை துவங்குகிறார்கள்.

போலீஸ்காரர் மூர்த்தி(வெங்கட் பிரபு) கொலை நடந்த இடத்திற்கு முதல் ஆளாக செல்கிறார். இந்நிலையில் உள்ளூர் ரவுடி ஒருவர் நான் தான் சம்பத்தை கொலை செய்தேன் என்று கூறி சரண் அடைகிறார். மேலும் தான் சம்பத்தை கொலை செய்தது எப்படி என்பதையும் விவரிக்கிறார். ஆனால் ரவுடி அளித்த வாக்குமூலம் இளவரசிக்கு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இதையடுத்து அவர் மூர்த்தியின் உதவியுடன் ஆதாரங்களை சேகரிக்கத் துவங்குகிறார்.

இந்நிலையில் பணிப்பெண் பூர்ணாவின் தற்கொலை வழக்கு குறித்து விசாரித்து வரும் மூர்த்தியின் உதவியாளரான வசந்த்(வைபவ்) அந்த மரணத்திற்கும், போலீஸ்காரரின் கொலைக்கும் தொடர்பு இருப்பதை கண்டுபிடிக்கிறார். சம்பத் கொலைக்கும், மூர்த்திக்கும் தொடர்பு இருப்பதை இளவரசி கண்டுபிடிக்கிறார். அதன் பிறகு என்ன நடக்கிறது என்பதை சுவாரஸ்யமாக சொல்லியிருக்கிறார் இயக்குநர்.

ஒரு கிரைம் த்ரில்லர் படம் எப்படி இருக்க வேண்டுமோ அப்படி இருக்கிறது லாக்கப். சில ஓட்டைகள் இருந்தாலும் கதையின் ஓட்டம் அதை நம்மை பெரிதாக எடுத்துக்கொள்ள வைக்கவில்லை. ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்க்கும் விதம் படம் பார்ப்பவர்களை கவர்கிறது.

படத்தில் தேவையில்லாத காட்சிகள் இல்லாதது ஆறுதல். ஆரம்பம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை திரையோடு கட்டிப் போட்டுவிட்டனர்.

கதையின் நாயகி ஈஸ்வரி ராவ் தான். அவரை அடுத்து வெங்கட் பிரபு அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார். அசால்டாக வில்லத்தனம் செய்ய ஒரு வில்லன் கிடைத்துவிட்டார். இனி வெங்கட் பிரபுவை அடிக்கடி வில்லனாக பார்க்கலாம். வைபவ் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். பூர்ணா தான் வரும் காட்சிகளில் கவர்கிறார். வைபவின் காதலியாக வரும் வாணி போஜனுக்கு படத்தில் வேலையே இல்லை.