பத்திரிகை மற்றும் ஊடகங்களின் ஆதரவிற்கு நன்றி தெரிவித்த லவ் டுடே குழு

84

பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில், கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ், கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோரின் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகியுள்ள லவ் டுடே திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதோடு, OTT தளத்திலும் தற்போது வெளியாகி சிறப்பான வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பை லவ் டுடே குழு இன்று ஏற்பாடு செய்தது.

இயக்குநர் பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி, சிஎஃப்ஓ ரங்கராஜன், நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் சிஎஃப்ஓ ரங்கராஜன், “நல்ல கதையம்சம் கொண்ட படம் எப்போதும் வெற்றி பெறும் என்று நான் நம்புகிறேன். நல்ல கதை, வசனம் மற்றும் திரைக்கதையுடன் வெளியாகும் படங்களை பார்க்க ரசிகர்கள் கண்டிப்பாக தியேட்டருக்கு வருவார்கள். அதை இப்போது லவ் டுடே நிரூபித்துள்ளது. அனைத்து பெருமைகளும் இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனுக்கு சொந்தமானது. இதற்கு கல்பாத்தி குடும்பத்தின் சார்பாக அவருக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.பத்திரிகை மற்றும் ஊடகங்கள் ஏஜிஎஸ்-க்கு ஆரம்பம் முதலே அளவற்ற ஆதரவை அளித்து வருகின்றன. எதிர்காலத்திலும் இது தொடரும் என நம்புகிறேன். ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு தொடர்ந்து ஆதரவு அளித்துவரும்

விநியோகஸ்தர்களுக்கும் திரையரங்கு உரிமையாளர்களுக்கும் திரைப்படத்துறையை சார்ந்தவர்களும் எனது நன்றிகள்,” என்றார்.

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் கிரியேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி கூறுகையில், சிறியதோ பெரியதோ எல்லா படங்களுக்கும் ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் ஒரே மாதிரியான முயற்சிகளை செய்கிறது என்று கூறினார். 

“ஒரு சிறிய படத்துடன் ஒப்பிடும்போது பெரிய படத்திற்கான விளம்பரம் எளிதான முறையில் நடக்கிறது. லவ் டுடே படத்திற்கு ஒருமித்த ஆதரவு அளித்த அனைத்து பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறிய படங்கள் மிகவும் முக்கியமானவை. பல சூப்பர் ஸ்டார்களை சிறிய படங்கள் உருவாக்கியுள்ளன, அதை நாம் பார்த்திருக்கிறோம். இதுபோன்ற சிறிய திரைப்படங்களுக்கு பத்திரிகைகளின் ஆதரவு முக்கியமானது. ஊடகங்கள் ஒரு திரைப்படத்தைப் பற்றிய நல்ல விஷயங்களைப் பகிர்வதால், பார்வையாளர்களுக்கு தானாகவே அந்த படத்தை பார்க்க ஆர்வம் ஏற்படும்,” என்று அவர் மேலும் கூறினார்.

இப்படத்திற்கு நல்ல ஓப்பனிங் கிடைக்கும் என எதிர்பார்த்ததாக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் தெரிவித்தார்.

தொடந்து பேசிய அவர், “இந்த நம்பிக்கை 50 சதவீதம் என் மேல் இருந்தது, மீதி மீடியா மேல் எனக்குள்ள நம்பிக்கை. லவ் டுடே ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்தே எங்களுக்கு ஏகப்பட்ட ஆதரவு கிடைத்தது. டிரெய்லர் வெளியான பிறகு படம் நல்லா இருக்கும் என அனைவரும் நம்பினீர்கள். அதனால் எங்களுக்கு நல்ல ஓப்பனிங் கிடைத்தது. நீங்கள் அளித்த விமர்சனங்கள் லவ் டுடேவை இந்த வருடத்தின் டாப் 10 படங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. உங்கள் ஆதரவு கோமாளி திரைப்படத்திற்கும் இப்போது லவ் டுடேக்கும் கிடைத்தது. எதிர்காலத்திலும் இது தொடரும் என்று நம்புகிறேன். நீங்கள் ஆதரிக்கக்கூடிய திரைப்படங்களை உருவாக்கவும் முயற்சிப்பேன். இந்தப் படத்தின் முதுகெலும்பாக இருந்ததற்கு ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு நன்றி,” என்று கூறினார்.

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் நிர்வாக தயாரிப்பாளர் வெங்கட் மாணிக்கம் இந்த நிகழ்வின் போது பத்திரிகை மற்றும் ஊடகங்களுக்கு நன்றி தெரிவித்தார்.