‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜாவின் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படப்பிடிப்பு தொடக்கம்

135

‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’, பட தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால், இயக்குநர் வம்சி ஆகியோரின் கூட்டணியில் பான் இந்தியா திரைப்படமான ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக தொடங்கியது.

‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் தயாரிப்பில் உருவாகும் பிரம்மாண்டமான திரைப்படம் ‘டைகர் நாகேஸ்வரராவ்’. இந்த திரைப்படத்தின் தொடக்க விழா மாதப்பூரிலுள்ள நோவாடெல் என்னுமிடத்தில் பிரமாண்டமாக அமைக்கப்பட்ட விழா மேடையில் நடைபெற்றது.

தெலுங்கு திரை உலகம் இதற்கு முன் கண்டிராத வகையில் பிரம்மாண்டமான பிரீ லுக் வெளியீட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ஊடக பிரபலம் தரன் ஆதர்ஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

படத்தின் முதல் பிரத்யேக படப்பிடிப்பை மெகா ஸ்டார் சிரஞ்சீவி கிளாப் போர்டு அடிக்க, இந்த திரைப்படத்தை வெளியிடும் தேஜ் நாராயணன் அகர்வால் கேமராவை இயக்க, நாயகன் ரவி தேஜா, நாயகிகள் நூபுர் சனோன் மற்றும் காயத்ரி பரத்வாஜ் நடித்தனர். இந்த காட்சிக்கு ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி கௌரவ இயக்குநராக பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து ‘டைகர் நாகேஸ்வரராவ்’ படத்தின் திரைக்கதையை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி படக்குழுவினரிடம் சமர்ப்பித்தார்.

டைகர் நாகேஸ்வரராவின் பிரீ லுக்கிற்கான மோஷன் போஸ்டரை மெகா ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்டு பேசுகையில், ”அனைவருக்கும் தெலுங்கு புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். டைகர் நாகேஸ்வரராவ் கதையை இயக்குநர் வம்சி இதற்கு முன்னர் கொரோனா காலகட்டத்தின் போது என்னிடம் சொல்லியிருந்தார். தவிர்க்க முடியாத சில காரணங்களால் அந்தக் கதையில் என்னால் நடிக்க இயலவில்லை. இப்போது என் தம்பி ரவி தேஜா அதில் நடிக்கிறார். ஸ்டூவர்ட் புரம் நாகேஸ்வரராவ் பற்றி நான் சிறுவயதில் கேள்விப்பட்டிருக்கிறேன். என்னுடைய தந்தை சிரால பேரால எனுமிடத்தில் பணியாற்றினார். அதற்கு அருகில்தான் ஸ்டூவர்ட்புரம். அங்குள்ள மக்கள் அனைவரும் நாகேஸ்வரரை நாயகன் என புகழ்ந்தார்கள். அவரைப் பற்றி நிறைய விஷயங்களை அப்பாவிடமிருந்து கேட்டிருக்கிறேன். பல ஆண்டுகள் கழித்து வம்சி ஒரு கமர்சியல் கதையுடன் என்னை சந்தித்தார். அவரிடம் ரவி தேஜா இந்தக்கதையில் நடிப்பது நல்லது. அவரை வைத்து இந்தப் படத்தை உருவாக்குவது நல்லது என்றேன். அபிஷேக் அகர்வால் இதைத் தயாரிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ரவிதேஜா அபிஷேக், வம்சி ஆகியோர் ஒன்றிணைந்து பணியாற்றி ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை விட மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.” என்றார்.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி பேசுகையில், ” உகாதி தினத்தன்று டைகர் நாகேஸ்வர ராவ் அவர்களின் வாழ்க்கையில் இடம் பெற்ற இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பான அனுபவங்களை கொண்ட திரைப்படத்தின் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அபிஷேக் அகர்வாலும், அவரது தந்தையும் பல ஆண்டுகளாக எங்களுடைய குடும்ப நண்பர்கள். அவர்கள் சமீபத்தில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை தயாரித்தனர். காஷ்மீரி பண்டிட்களின் வேதனையை அனைத்து இந்தியர்களுக்கும் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி தெரியப்படுத்தினார். விவேக் தனது திறமைக்கு ஏற்றவாறு கதையை படமாக்கி உள்ளார். பண்டிட்களை பற்றி இன்னும் நிறைய விவாதிக்க வேண்டும். பெரும்பாலோர் திரைப்படம் எடுக்கிறார்கள்.அதில் சில படங்கள் மட்டுமே பயனுள்ள படங்களாக உள்ளன. நாட்டுக்காக இதைப் போன்று ஒரு பயனுள்ள படத்தை உருவாக்கியதற்காக அபிஷேக்கை மனதார பாராட்டுகிறேன். இப்போது டைகர் நாகேஸ்வரராவின் கதையை தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். இந்த படமும் பெரிய அளவில் வெற்றி பெற இறைவனை பிரார்த்திக்கிறேன்.” என்றார்.

இயக்குநர் வம்சி இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மெகா ஸ்டார் சிரஞ்சீவி உள்ளிட்டவர்களுக்கு நன்றி தெரிவித்து பிறகு பேசுகையில், ” ரவிதேஜாவுடன் நான்காண்டுகள் பயணித்தேன். கதை அவருக்கு பிடித்து இருந்ததால் நடிக்க முழு மனதுடன் ஒப்புக் கொண்டார். ரவிதேஜாவின் ரசிகர்கள் மட்டுமல்லாது அனைத்து தெலுங்கு திரையுலக முன்னணி நாயகர்களின் ரசிகர்களும் இப்படத்தை பாராட்டுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

படத்தின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் பேசுகையில், ” அனைவருக்கும் யுகாதி தின வாழ்த்துகள். இவ்விழாவிற்கு வருகை தந்து எங்களை ஆசீர்வதித்த சிரஞ்சீவி அவர்களுக்கு நன்றி. அமைச்சர் கிஷன் ரெட்டி அவர்களுக்கு நன்றி. ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை பெரிய வெற்றிப் படமாக்கிய பார்வையாளர்களுக்கு மீண்டும் மீண்டும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். டைகர் நாகேஸ்வரராவ் படத்தையும் ஆசீர்வதிப்பார் என நம்புகிறேன்.” என்றார்.

சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துவிட்டு பேசுகையில், ” சிறந்த படங்கள் நேர்த்தியான அர்ப்பணிப்புடன் உருவாக்கப்படுகின்றன. படத்தை வெற்றி பெற உதவிய அபிஷேக் மற்றும் அவரது தந்தைக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டு முதல் இயக்குநர் வம்சியை எனக்கு தெரியும். அவருக்கு எனது படத்தின் மீது முழு நம்பிக்கை இருந்தது. இந்த படத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. அவர் இப்போது ரவிதேஜாவை நாயகனாக வைத்து டைகர் நாகேஸ்வரராவ் தயாரிக்கிறார். இந்திய வரலாற்றில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் வசூல் 300 கோடியை கடந்து விட்டது. இந்த சந்தர்ப்பத்தில் டைகர் அபிஷேக்கை நான் பாராட்டுகிறேன்.” என்றார்.

விழாவில் கலந்துகொண்ட படத்தின் நாயகிகள் நுபர் சனோன், காயத்ரி பரத்வாஜ் மற்றும் ரேணு தேசாய் ஆகியோர் வருகை தந்திருந்தவர்களுக்கும், பார்வையாளர்களுக்கும் உகாதி வாழ்த்துக்களை தெரிவித்து விட்டு நன்றி தெரிவித்தனர்.

பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்களுடன் திரைப்பட இயக்குநர்கள் சரத் மண்டவா, திரிநாத ராவ் நாகினா, சுதீர் வர்மா, தேஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக படத்தின் நாயகன் ‘மாஸ் மகாராஜா’ ரவிதேஜா அனைவருக்கும் உகாதி வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்தார்.