சென்னை அணியின் வெற்றி வாய்ப்பை பறித்த மூன்று தவறுகள்!

202

சென்னை அணி 6 போட்டிகளில் பங்கேற்று இரண்டு வெற்றிகளை மட்டுமே பதிவு செய்துள்ளதால், பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதில் சிக்கல் எழுந்துள்ளது. இனி வரும் போட்டிகளில் சரியான வியூகம் அமைத்துச் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் அந்த அணி உள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சாளர்கள் சிறப்பாகப் பந்து வீசியதன் காரணமாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 167 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. ராகுல் திரிபாதி மட்டும் சிறப்பாக சோபித்து 51 பந்துகளில் 81 ரன்கள் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்குக் காரணமாக இருந்தார்.

168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய சென்னை அணி, கடைசி நேரம் வரை வெற்றி முகத்தில் இருந்தது. 47 பந்துகளில் 69 ரன்கள் சேர்க்க வேண்டும் என்ற நிலையில் 9 விக்கெட்கள் கைவசம் வைத்திருந்தது. இருப்பினும், கொல்கத்தா அணி பௌலர்கள் விடாமுயற்சியுடன் செயல்பட்டு, சென்னை அணி பேட்ஸ்மேன்களை ஆட்டம் காணச் செய்தனர். இதனால் நிலைகுலைந்துபோன சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியைச் சந்தித்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி செய்த மூன்று முக்கிய தவறுகள் பற்றிப் பார்ப்போம்.

பேட்டிங் வரிசையில் அதிக மாறுதல்கள்!

சென்னை அணி கேப்டன் மகேந்திரசிங் தோனி, அணியில் அதிக மாறுதல்கள் செய்ய விரும்பாதவர். ஆனால், இந்த சீசனில் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்ததால், வேறு வழியின்றி பேட்டிங் வரிசையில் அதிக மாறுதல்கள் செய்யப்பட்டு வருகிறது. தோனி களமிறங்கும் வரிசை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. அதேபோல், நேற்றைய போட்டியில் டுவைன் பிராவோ இடத்தில் கேதர் ஜாதவ் களமிறங்கிச் சொதப்பினார். பேட்டிங் வரிசை நிலைத்தன்மை இல்லை என்றால், பேட்ஸ்மேன்களால் உறுதியாக விளையாட முடியாது. இனி வரும் காலங்களில் சென்னை அணி இதுபோன்ற தவறுகளைச் செய்யாமல், வெற்றிகளைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஷேன் வாட்சனை மட்டும் நம்பியிருந்தது!

துவக்க வீரர் ஷேன் வாட்சன் ஆட்டமிழந்த பிறகு, எந்த பேட்ஸ்மேனும் பெரிய ஷாட்களை அடிக்க முற்படவில்லை. இதனால், அடிக்க வேண்டிய ரன்ரேட் விகிதம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே சென்று, பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடி ஏற்பட்டது. வாட்சனுக்கு பிறகு, ஒருவராவது நிலைத்து நின்று விளையாடியிருந்தால், சென்னை அணி நிச்சயம் வெற்றிபெற்றிருக்கும் எனக் கருதப்படுகிறது.