பேண்டஸி உலகம் ஒன்று நிஜத்தில் உருவாக்கப்பட்டுள்ளது ஹனு-மான் திரைப்படத்திற்காக…
பிரம்மாண்டமான ஆச்சரியமான விஷயம்
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், நடிகர் தேஜா சஜ்ஜா நடிப்பில், பிரம்மாண்ட பான் இந்தியப் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் ஹனு-மான்.
இயக்குநர் பிரசாந்த் வர்மாவின் திரைப்பட யுனிவர்ஸின் முதல் படமாக உருவாகும் ஹனு-மான் படத்தின் கதை அடிப்படையில் “அஞ்சனாத்ரி” என்ற கற்பனை இடத்தில் நடப்பதாக அமைக்கப்பட்டுள்ளது. முழுக்க சிஜியில் உலகத்தரத்தில் இந்த ஃபேண்ட்ஸி உலகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படம் பொங்கல் கொண்டாட்டமாக திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தினை விளம்பரப்படுத்தும் பணியில் படக்குழுவினர் பம்பரமாகச் சுழன்று வருகின்றனர். இப்படத்தின் தமிழ்ப் பதிப்பினை, விளம்பரப்படுத்தும் வகையில், படக்குழுவினர் சென்னையில், தமிழ் பத்திரிக்கை, ஊடக, பண்பலை நண்பர்களைச் சந்தித்தனர்.
இந்நிகழ்வினில்
தயாரிப்பாளர் சைத்தன்யா பேசியதாவது…
எல்லோருக்கும் அட்வான்ஸ் பொங்கல் வாழ்த்துக்கள். இந்த நேரத்தில் நிரஞ்சன் ரெட்டி, அஸ்ரின் ரெட்டி,, வெங்கட் குமார் ஜெட்டி மற்றும் இயக்குநர் பிரசாந்த் வர்மா ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். படத்தின் இறுதிக்கட்ட வேலைகளால் அவர்களால் இங்கு வர முடியவில்லை. திரைப்படத்தின் மீதான எங்களது காதலின் வெளிப்பாடாக இப்படைப்பை உருவாக்கியுள்ளோம். இப்படத்திற்காக அனைவரும் கடுமையான உழைப்பைத் தந்துள்ளனர். இப்படம் மிகச்சிறப்பாக வந்திருக்கிறது. ஒரு சிறு முயற்சியாக துவங்கி பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. உங்கள் எல்லோருக்கும் இப்படம் புது அனுபவமாக இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் சார் இப்படத்தை வெளியிடுவது எங்களுக்குக் கூடுதல் பலம். அவருக்கு என் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன், படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள். நன்றி.
சக்தி பிலிம் பேக்டரி சக்திவேலன் பேசியதாவது..
சைதன்யா மேடம் இந்நிகழ்ச்சிக்குக் கிளம்பும்போது செருப்பு போடவில்லை, மொத்த டீமும் அப்படித்தான். ஹனுமான் மீதான அனைவரின் அர்ப்பணிப்பும் அங்கேயே தெரிகிறது. நான் கடந்த ஒரு வருடமாக இப்படத்தைக் கவனித்து வருகிறேன். படத்தை முடித்துவிட்டாலும், ஒரு வருடமாக சிஜி வேலை செய்து வருகிறார்கள். உலகத்தரத்தில் இப்படைப்பினை உருவாக்கியுள்ளனர். இந்தப்படத்தை நான் செய்ய வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இந்த புது வருடத்தில் இப்படத்துடன் ஆரம்பிப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. பொங்கலை ஹனுமானுடன் ரசிகர்கள் கொண்டாடலாம். பத்திரிக்கை நண்பர்கள் இந்தப்படத்திற்கும் எப்போதும் போல் உங்கள் ஆதரவைத் தாருங்கள் நன்றி.
நடிகர் வினய் பேசியதாவது…
இது ஒரு தெலுங்குப்படம், நான் செய்யும் முதல் தெலுங்குப்படமாக இருந்தது, ஒரு வகையில் அப்படித்தான் ஆரம்பமானது. சின்னப்படமாக தான் ஆரம்பித்தது ஆனால் ஹனுமனின் ஆசீர்வாதத்தில் இப்படம் பான் இந்திய அளவில் மிகப்பெரிய படமாக மாறியுள்ளது. இந்தப்படத்திற்காக எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளார்கள். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. படத்தில் நிறைய சர்ப்ரைஸ் இருக்கிறது. தயாரிப்பில் நிரஞ்சன், சைத்தன்யா ஆகியோர் படத்திற்காக ஒவ்வொன்றையும் பார்த்துச் பார்த்து செய்துள்ளனர். நான் இந்தப்படத்தில் வித்தியாசமான காஸ்ட்யூமில் வித்தியாசமான பாத்திரத்தில் நடித்துள்ளேன். உங்கள் எல்லோருக்கும் கண்டிப்பாகப் பிடிக்கும். சக்தி பிலிம் பேக்டரி ஒரு படத்தை வெளியிட்டால் அது வெற்றிப்படமாக இருக்கும், இப்படத்தை அவர்கள் வெளியிடுவது மகிழ்ச்சி. படத்திற்கு உங்கள் ஆதரவைத் தாருங்கள்
நடிகை அம்ரிதா ஐயர் பேசியதாவது…
இப்படத்தை தெலுங்குப்படமாக தான் ஆரம்பித்தோம், கொஞ்ச நாளில் பான் இந்தியப்படமாகி, பின்னர் இப்போது பான் வேர்ல்ட் படமாக மாறியுள்ளது. அனுமனின் ஆசீர்வாதம் தான் அதற்குக் காரணம். இப்படத்தைப் பெரிய அளவில் எடுத்துச்சென்ற தயாரிப்பாளர்களுக்கு என் நன்றி. இந்தப்படம் இந்திய சினிமா பெருமைப்படும் படமாக இருக்கும். ரசிகர்கள் தியேட்டரில் கொண்டாடும் படமாக இருக்கும். சாதாரண பையனுக்கு அனுமனின் பவர் கிடைத்தால் என்னாகும் என்பது தான் கதை, ஆன்மீக படமல்ல, எல்லோருக்கும் பிடிக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிப்பார்கள். திரையரங்கில் பார்க்க வேண்டிய படம் இது புதுமையான அனுபவத்தைத் தரும். உங்கள் ஆதரவைத் தாருங்கள்
நடிகை வரலட்சுமி பேசியதாவது…
இந்தப்படத்தின் வளர்ச்சி பிரமிப்பாக இருக்கிறது. எல்லோரும் கதை சொல்லும்போது, படம் இப்படி வரும் என நினைப்போம், ஆனால் நாங்கள் யாருமே நினைக்காத அளவு, இப்படம் பிரம்மாண்டமாக வந்துள்ளது. சைத்தன்யா மேடம் பிரசாந்த் கேட்ட அத்தனையும் தந்து, இப்படத்தை மிகப்பெரிய படமாகக் கொண்டு வந்துள்ளார்கள். பிரசாந்த், தேஜா இந்தப்படத்திற்காகக் கடுமையாக, ஒவ்வொரு ஃபிரேமிலும் உழைத்துள்ளனர். இந்தப்படம் இந்தியாவின் முதல் சூப்பர் ஹீரோ படமாக இருக்கும். புதுசாக இருக்கும். டிரெய்லர் பார்த்திருப்பீர்கள், ஆனால் படம் இன்னும் நிறைய ஆச்சரியம் தரும். சில படங்களின் விஷுவலை திரையரங்கில் பார்த்தால் தான் அனுபவிக்க முடியும் இது அப்படியான படைப்பு. படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
நடிகர் தேஜா சஜ்ஜா பேசியதாவது…
ஹனுமான் படத்திற்குப் பின்னால் மிகப்பெரிய உழைப்பு இருக்கிறது. இது தெலுங்குப்படமல்ல, நேரடித்தமிழ் படம் மாதிரி தான் இருக்கும். அதற்காக நிறைய உழைத்துள்ளோம். இப்படத்தை மிகப்பெரிய படமாக்கத் தயாரிப்பு தரப்பில்,சைத்தன்யா மேடம், நிரஞ்சன் சார் மிகப்பெரிய ஆதரவைத் தந்துள்ளார்கள். டிரெய்லரிலேயே படத்தின் தன்மை உங்களுக்குத் தெரியும். படம் கண்டிப்பாக உங்கள் எல்லோருக்கும் பிடிக்கும் வகையில் இருக்கும். சக்தி பிலிம் பேக்டரி இப்படத்தை வெளியிடுகிறார்கள் அவர்களுக்கு எனது நன்றி. இது முழுக்க முழுக்க கற்பனைக் கதை,”அஞ்சனாத்ரி” என்ற உலகை இப்படத்திற்காக உருவாக்கியுள்ளோம். ஒரு பையனுக்கு அனுமனின் சக்தி கிடைப்பது தான் கதை. வினய், வரலட்சுமி, அம்ரிதா என எல்லோரும் மிகச்சிறப்பாகச் செய்துள்ளனர். படம் மிகச்சிறப்பாக வந்துள்ளது. நம் தென்னிந்தியக் கலாச்சாரத்தில், பொங்கலுக்கு 4,5 படங்கள் பார்க்கும் வழக்கம் இருக்கிறது, அது போல் இந்தப் பொங்கலுக்கு எங்கள் படத்திற்கு ஆதரவு தாருங்கள். இது ஓடிடியில் பார்க்கும் படமல்ல திரையரங்கில் அனுபவிக்க வேண்டிய படம். டிரெய்லருக்கு நல்ல வரவேற்பு தந்தீர்கள் படத்திற்கும் ஆதரவு தாருங்கள். நன்றி.
தெலுங்கு, இந்தி, மராத்தி, தமிழ், கன்னடம், மலையாளம், ஆங்கிலம், ஸ்பானிஷ், கொரியன், சீனம் மற்றும் ஜப்பானியம் உள்ளிட்ட பல மொழிகளில் ஹனு-மான் பான் வேர்ல்ட் படமாக வெளியிடப்படவுள்ளது.
இப்படத்தில் தேஜா சஜ்ஜாவுக்கு ஜோடியாக அம்ரிதா ஐயர் கதாநாயகியாக நடிக்கிறார், இப்படத்தில் வினய் ராய் வில்லனாகவும், வரலட்சுமி சரத்குமார் முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர்.
பிரைம்ஷோ என்டர்டெயின்மென்ட்டின் K நிரஞ்சன் ரெட்டி இப்படத்தை பெருமையுடன் தயாரிக்கிறார், ஸ்ரீமதி சைத்தன்யா வழங்குகிறார். அஸ்ரின் ரெட்டி நிர்வாக தயாரிப்பாளராகவும், வெங்கட் குமார் ஜெட்டி லைன் தயாரிப்பாளராகவும், குஷால் ரெட்டி இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர்.
இந்த பிரம்மாண்டமான படைப்பின், ஒளிப்பதிவை சிவேந்திரா செய்துள்ளார், இப்படத்திற்கு இளம் திறமையாளர்களான கவுரஹரி, அனுதீப் தேவ் மற்றும் கிருஷ்ணா சவுரப் ஆகிய மூவர் இணைந்து இசையமைத்துள்ளனர். ஸ்ரீநாகேந்திரா தாங்கலா தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றியுள்ளார். மிகவும் எதிர்பார்ப்பில் உள்ள இப்படம் ஜனவரி 12, 2024 பொங்கல் அன்று திரைக்கு வரவுள்ளது.