ஆன்லைன் சூதாட்டத்தை அம்பலப்படுத்தும் படம் ‘விழித்தெழு ‘

154

தொழில்நுட்பப் புரட்சி எந்த அளவுக்கு மக்களுக்கு சௌகரியத்தையும் வசதியையும் நேர சேமிப்பையும் அளிக்கிறதோ அதே அளவிற்கு ஆபத்தானதும் கூட.

நொடிப்பொழுதில் பணப்பரிவர்த்தனைகள் ஆன்லைனில் நடக்கின்றன. அதேபோல் ஆன்லைன் சூதாட்டங்கள் மூலம் நொடிப் பொழுதில் தங்கள் பணத்தை இழந்தவர்களும் ஏராளம்.

இப்படி ஆன்லைன் மூலம் பண இழப்பைச் சந்தித்தவர்கள் நம் அருகிலேயே இருப்பார்கள் .அதனால்தான் அப்படிப்பட்ட ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கத் தமிழகஅரசு முன்வந்து நடவடிக்கை எடுக்கத் தொடங்கி இருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் இந்த ஆன்லைன் சூதாட்டத்தை மையமாக்கி அதன் தீமைகளை விவரித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உருவாகியுள்ள படம் தான் ‘விழித்தெழு’.

ஆதவன் சினி கிரியேஷன் தயாரிப்பில் உருவாகும் இந்தத் திரைப்படத்தை சி எம். துரை ஆனந்த் தயாரித்துள்ளார். சிவகங்கை நகராட்சியின் நகர்மன்றத் தலைவராக உள்ள இவர், ஒரு பத்திரிகையாளரும் கூட.

இன்றைய சூழலில் அனைவரது வாழ்க்கையிலும் இணையதள மோசடியை அனுபவித்துக் கொண்டுதான் இருக்கிறோம் .அதைத் தட்டிக் கேட்கும் விதமாக விழித்தெழு படம் உருவாகியுள்ளது.

திரைப்பட இயக்குநர் தமிழ்செல்வன் தயாரிப்பாளரிடம் இந்தக் கதையைச் சொல்லும்போதே தயாரிப்பாளர் “மிகவும் அருமையான கதை இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான கதை என்று உடனே படப்பிடிப்பு நடத்தி படத்தை எடுத்து உடனே ரிலீஸ் செய்ய வேண்டும்” என்று கூறியிருக்கிறார். சொன்னபடியே மும்முரமாக களத்தில் இறங்கியும் உள்ளார்.

மதுரை மற்றும் சிவகங்கை சுற்றுப்பகுதிகளில் மிக பிரம்மாண்டமான முறையில் படபிடிப்பு நடைபெற்று நிறைவடைந்துள்ளது.

கதாநாயகனாக முருகா அசோக், கதாநாயகியாக காயத்ரி ரெமோ , பருத்திவீரன் சுஜாதா, சரவணசக்தி , வினோதினி, வில்லு முரளி ,ரஞ்சன், சேரன் ராஜ், மணிமாறன், சாப்ளின் பாலு, சுப்பிரமணியபுரம் தனம் ,நெஞ்சுக்கு நீதி திருக்குறளி, காந்தராஜ், அறிமுகம் லட்டு ஆதவன், கார்த்திக்,மற்றும் பலர் நடித்துள்ளனர் .

இப்படத்தில் தயாரிப்பாளர் சிஎம். துரை ஆனந்த் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் பருந்துப் பார்வை பத்திரிகையாளராக நடித்துள்ளார்.

படத்தில் மூன்று பாடல் காட்சிகள் மிகவும் பிரமாண்டமான முறையில் அமைந்துள்ளன. இப்படத்தின் இசையமைப்பாளர் நல்லதம்பி கதைக்கேற்றபடி அழகாக இசையமைத்துள்ளார். படத்தின் எடிட்டிங் எஸ் ஆர் முத்துக்குமார், ஸ்டண்ட் எஸ் ஆர் ஹரிமுருகன், நடனம் ஸ்டைல் பாலா, ஒளிப்பதிவு இனிய கதிரவன், ஆ.சம்பத்குமார். இப்படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி தமிழ்செல்வன் இயக்கியுள்ளார்.

ஆன்லைன் சூதாட்டம் பற்றி பேச வந்திருக்கும் இந்தப் படம் காலத்துக்கேற்ற ஒரு படைப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.