விரைவில் வெளியாகவிருக்கும் ‘ஆதார்’

134

இறுதிகட்ட பணியில் ‘ஆதார்’

நடிகர் கருணாஸ் நடிப்பில் தயாராகும் ‘ஆதார்’ படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று இறுதிகட்டத்தை எட்டியிருக்கிறது. இப்படத்தை வெளியிடுவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்திருக்கிறார்கள்.

‘அம்பாசமுத்திரம் அம்பானி’, ‘திருநாள்’ ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் ராம்நாத் பழனி குமார் இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் ‘ஆதார்’. இந்தப் படத்தில் நடிகர்கள் கருணாஸ், அருண்பாண்டியன், ‘காலா’ புகழ் திலீபன், ‘பாகுபலி’ புகழ் பிரபாகர் ஆகியோர் கதையின் நாயகர்களாக நடிக்க, இவர்களுடன் நடிகைகள் ரித்விகா, இனியா, உமா ரியாஸ்கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்திருக்கிறார்.

வெண்ணிலா கிரியேஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பி. சசிகுமார் தயாரித்திருக்கும் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் பொங்கல் திருநாளன்று வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது இப்படத்தின் பணிகள் நிறைவடைந்து இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. அத்துடன் ‘ஆதார்’ படத்தை வெளியிடுவதற்கான பேச்சுவார்த்தையையும் படக்குழுவினர் தொடங்கியிருக்கின்றனர்.

எளிய மனிதர்களின் வலியைப் பேசும் யதார்த்தப் படைப்பாக உருவாகியிருக்கும் ‘ஆதார்’ படத்தின் டீசர், சிங்கிள் ட்ராக், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகவிருப்பதாக படக்குழுவினர் உற்சாகமாக தெரிவித்திருக்கிறார்கள்.