‘கபடதாரி’ படக்குழு கொடுத்த சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு! – மகிழ்ச்சியின் உச்சத்தில் சிபிராஜ்

175

கோலிவுட்டின் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவரான சிபிராஜ், இன்று தனது 36 வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலக பிரபலங்கள் பலர் வாழ்த்து கூறி வரும் நிலையில், அவர் நடிப்பில் உருவாகி வரும் ‘கபடதாரி’ படக்குழுவினர் சர்பிரைஸ் பிறந்தநாள் பரிசு ஒன்றை வழங்கி அவரை மகிழ்ச்சியின் உச்சத்திற்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.

கொரோனா பாதிப்பால் பெரிதும் பாதிப்படைந்த சினிமாத்துறை தற்போது மெல்ல தலை தூக்க தொடங்கியுள்ளது. திரைப்பட படப்பிடிப்புகளுக்கு சில கட்டுப்பாடுகளுடன் அரசு அனுமதி அளித்ததை தொடர்ந்து, பாதியில் நின்று போன படப்பிடிப்புகள் மீண்டும்
தொடங்கியுள்ளது. அந்த வகையில், ‘கபடதாரி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அரசின் கட்டுப்பாடுகளையும், விதிமுறைகளையும் பின்பற்றி மூன்று நாட்களில் எஞ்சிய படப்பிடிப்பை முடித்துவிட்டார்கள். தற்போது பின்னணி வேலைகளில் மும்முரம் காட்டி வரும் படக்குழுவினர், திரையரங்குகள் முழுமையாக திறந்த உடன் படத்தை ரிலீஸ் செய்யவும் திட்டமிட்டுள்ளார்கள்.

இந்த நிலையில், இன்று (அக்.6) பிறந்தநாள் காணும் ‘கபடதாரி’ படத்தின் ஹீரோ சிபிராஜுக்கு சர்பிரைஸ் பரிசு வழங்க நினைத்த ‘கபடதாரி’ படக்குழுவினர் படத்தின் பஸ்ட் லுக்கை இன்று வெளியிடுவதாக அறிவித்ததோடு, சிபிராஜிக்கு பிடித்த ஹீரோக்களில் ஒருவரான சூர்யாவே, பஸ்ட் லுக்கை வெளியிடும்படியும் செய்துள்ளார்கள்.

இது பற்றி சிபிராஜுக்கு எந்த தகவலும் தெரிவிக்காமல், நேற்று இரவு இந்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டதும், சிபிராஜ் சந்தோஷத்தின் உச்சத்திற்கே சென்று விட்டார். அவரைப் போல அவரது ரசிகர்களும் ‘கபடதாரி’ பஸ்ட் லுக் ரிலீஸை கொண்டாடி
வருகிறார்கள்.

கிரியேட்டிவ் எண்டர்டெய்னர்ரஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனம் சார்பில் ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்குகிறார். சிமோன் கே.கிங் இசையமைக்க, ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.